பனினான்கு பேர் சேர்ந்தார்கள்! 100 ஏக்கரில் ஒரு கூட்டுப்பண்ணை பிறந்தது!
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அடர்ந்த வனம் சூழ்ந்த பகுதி பண்டிப்பூர் ஆகும். அந்தக் காடுகளுக்கு நடுவே இந்தியாவின் கனவு திட்டமான வேளாண் கூட்டுப்பண்ணை.. பெங்களரில் இருந்து 200 கி.மீ. பயணத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் 'ஹிமவத் வேளாண் கூட்டுப்பணை' நம்மை வரவேற்கிறது. வேளாண் விஞ்ஞானிகள் சிந்தித்து வரும் திட்டம். இங்கு 14 விவசாயிகளால் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
மைசூர் தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.கு.புகழேந்தி, திரு.வீ.பாலகிருஷ்ணன் மற்றும் திரு.ரவிக்குமார் உள்ளிட்ட 14 பேர் இந்த திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி, வருகிறார்கள். விதைக்கப்பட்டு ஓராண்டு ஆனாலும், வளர்ச்சி என்னவோ ஒட்டுச் செடி போல் 'கும்'மென்று இருக்கிறது.
இந்தியாவிற்கு முன்னோடியாக இருக்கும் 'ஹிமவத் வேளாண் கூட்டுப்பண்ணை' - இவர்களின் கனவில் கருவானது எப்படி? மைசூர் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பண்ணைப் பங்குதாரர்களில் ஒருவரும், பண்ணையின் நிர்வாகியுமான திரு.கு.புகழேந்தி மா, வாழை, மலைவேம்பு, கரும்பு புடைச்சூழ பச்சைத் தரையில் நடந்து கொண்டே, தொடங்கிய செய்தியைப் படையலிடுகிறார்.
"இந்த பண்ணை உருவானத்தில் ஒரு மாறாத வடு ஒன்று ஒளிந்துள்ளது. 1991 டிசம்பர் 23-ம் தேதி, காவிரி நதிநீர் சிக்கலால் கர்நாடகா, தீயாக பற்றியெரிய தொடங்கிய நாள். கர்நாடக வாழ் 'தமிழ்' மக்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள். கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட்டில் முதல் கலவரம் வெடித்தது. கர்நாடகாவில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அபலைகளாக தாய்நாட்டில் தாக்கப்ப்டடார்கள்.
அதனால் வீடு மற்றும் சொத்துகளை இழந்த தமிழ்க் குடும்பங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டிலேயே அகதிகளாக தமிழகத்திற்கு விரைந்தனர். அப்போது மைசூர் தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த நான், தமிழர்களைக் காப்பாற்ற போலீசாரிடம் முறையிட்டேன். கர்நாடகா முழுவதும் எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் கேட்ட போது, புள்ளிவிரம் இல்லாமல் போலீசார் முன் தலை குனிந்து நின்றேன்.
அதன் பிறகு, 1992-ம் ஆண்டில் கர்நாடகா முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ்ச்சங்களை உருவாக்கினோம். இலக்கிய வளர்ச்சி மட்டுமல்லாது, தன்னம்பிக்கை பயிற்சி உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளையும் நடத்தினோம்.
2000-ம் ஆண்டு நடந்த தன்னம்பிக்கை பயிற்சி நிகழ்ச்சியில் 'எக்ஸ்னோரா' தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு. எம்.பி.நிர்மல், பயிற்சி அளித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மல், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தொழிலாளிகளாக இருக்கிறீர்கள். பொருளாதார வலிமை தான் வலுவுள்ள சமுதாயத்தை உருவாக்கும். எனவே, நீங்கள் தமிழ் முதலாளிகளாக உருவாக வேண்டும். அதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சிலர். கர்நாடகாவில் நிலம் வாங்கி வேளாண்மை செய்ய விரும்புகிறார்கள். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம்' என பேசினார்.
இவரின் பேச்சால் உந்தப்பட்ட நாங்கள். உடனடியாக நிலம் தேடும் படலத்தில் ஈடுபட்டோம். நிலத்தை கண்டறிந்துவிட்டு. அமெரிக்காவுக்கு தகவல் அளித்தோம். ஆனால் அமெரிக்காவில் இருந்து பதிலில்லை. அதைப்பற்றி கவலையுடன் விவாதித்து கொண்டிருந்த போது. எனது நண்பரும், குண்டல்பேட் தமிழ்ச்சங்க செயலாளருமான திரு. வீ.பாலகிருஷ்ணன், அண்ணே! நாமே நிலம் வாங்கி வேளாண் கூட்டுப்பண்ணை தொடங்கினால் என்ன? என பொறி போட்டார்.
உடனே சுறுசுறுப்டைந்த நான். ஆர்வம் உள்ள நண்பர்களை அணுகினேன். என்னையும் சேர்த்து 14 பேர் ஒன்றிணைந்தோம். கர்நாடகாவில் விசாய நிலம் வாங்க வேண்டுமானால். அவர் விவசாயியாக இருக்க வேண்டும் அல்லது அவரின் தந்தை விவசாயியாக இருந்திருக்க வண்டும். கூட்டு சேர்ந்த 14 பேரும் வேளாண் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், நிலம் வாங்குவதில் சிக்கல் ஏற்படவில்லை.
என்ன தான் வேளாண் கூட்டுப்பண்ணை நாட்டுக்கு நல்லது என்றாலும், இதில் சில சட்டசிக்கல்கள் உள்ளன. எந்த ஒரு தொழிலையும் கூட்டாக சேர்ந்து செய்தால், அரசுக்கு 35% வரி செலுத்த வேண்டும். இதில் வேளாண்மையும் அடங்கும். வழக்கமாக வேளாண் வருவாய்க்கு வருமானவரி செலுத்த வேண்டியதில்லை. ஆனால், கூட்டாக செய்வதால் வரி செலுத்த வேண்டிய நிலைமை. எனவே, வருவாயில் 35% வருமான வரிசெலுத்துவதை தவிர்க்க எண்ணிய நாங்கள். எங்களுக்குள்ளே பேசி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு கையெழுத்திட்டிருக்கிறோம்.
கூட்டு முயற்சியல் எந்தவித குளறுபடியோ அல்லது பாதகமோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உறுதி செய்திருக்கிறோம். 100 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறோம். பங்குதாரர்களின் முதலீடுக்கு பாதுகாப்பு முக்கியமென்பதால். முதலீடுக்கேற்ப நிலத்தை அவர்கள் பெயரில் பதிவு செய்துள்ளோம். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீடுக்கேற்ப பங்கீடு செய்து கொள்வோம். இப்படி பல்வேறு விதிமுறைகளை வகுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரையறுத்துள்ளோம்.
இந்தத் திட்டத்தில் பலலட்சங்களை முதலீடு செய்துள்ளோம். விஜயா வங்கியிடமிருந்து இதுவரை ரூ.75 லட்சம் கடன் பெற்றுள்ளோம். புதுமையான அணுகுமுறை, நவீன தொழில்நுட்பம். தெளிவான திட்டமிடல். சிக்கனமான நீர்ப்பாசனம். முறையாக சந்தைப்படுத்தல், நேர்த்தியான நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு கரும்பு, மஞ்சள், மாங்காய், முருங்கை, கருவேப்பிலை, எலுமிச்சை, வாழை, மலை வேம்பு ஆகியவற்றை பயிரிட்டுள்ளோம். 100 ஏக்கர் பரப்பளவிற்கும் சொட்டு நீர்ப்பாசன வசதியை செய்துள்ளோம்.
இந்த நிலத்தைத்தேர்வு செய்ததற்கு முக்கியக் காரணம், செம்மண் தான். இம்மண்ணில் எல்லாப் பயிரும் தங்குதடையின்றி வளரும் என்பது வேளாண் வல்லுநர்களின் கருத்து. ஒவ்வொரு பயிரையும் நன்கு ஆலோசித்த பிறகு, அனுபவம் வாய்ந்த விவசாயத்தில் அவ்வப்போது அரும்பிவரும் நவீன தொழில் நுட்பத்தை உடனுக்குடன் எங்களுக்கு வழங்கி வருபவர் திரு.வீ.பாலகிருஷ்ணன் ஆவார்.
இவர் இந்த பகுதியில் 'தக்காளி ராஜா' என அழைக்கப்படுபவர். ஒவ்வொரு பருவ காலத்திலும் தக்காளி சாகுபடியில் மட்டும் லட்சக் கணக்கில் லாபம் பெற்று வருபவர். முதல் ஆண்டில் ரூ. 60 ஆயிரம் லாபம் கிடைக்கும் என எதிர் பார்க்கிறோம். இந்த லாபம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வகையில் திட்டமிட்டு செய்லபட்டு வருகிறோம்.
.....








