அடையாளச் சிகரங்கள் கு. புகழேந்தி நல்லுறவு நட்சத்திரம்
நேர்காணல்: கனியமுதன்
1970ஆம் ஆண்டு மைசூருக்குக் குடிபெயர்ந்து 1979ஆம் ஆண்டு அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட புகழேந்தி அச்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை (பதவிகளையல்ல) ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். இன்றுவரை மைசூர்த் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் அச்சங்கத்தின் வெளியீடான மைசூர் முரசு மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். மைசூரைப் பொறுத்தவரை புகழேந்தி என்பவர் நல்ல மனங்களை அன்பால் இணைக்கும் பாலம். அங்கு வாழும் தமிழர்களின் பலம், இவற்றுடன் இப்போது அவர் ஹிமாவத் பண்ணையின் வளம்.
உடைக்கிற மனப்பான்மை மேலோங்கி வரும் இன்றைய சமுதாயத்தில் அனைவரையும் ஒன்று சேர்க்கிற மனப்பான்மை அவருடையது. மைசூர்த் தமிழ்ச் சங்கத்தால் தமிழர்களை ஒன்று சேர்க்கும் விதமாகத் தொடங்கிய அவரது பணி தொடர்ந்து ஒன்று சேர்க்கும் விதமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தக் காலங்களில் இருதரப்புக்கும் இணக்கம் ஏற்பட அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ள பிற மாநிலத் தமிழ்ச் சங்கங்களை ஒன்று சேர்த்துப் பாலம் அமைப்பதில் அவரது உழைப்பு மகத்தானது. காவிரி கலவர வழக்கில் வெற்றியடைய பல தரப்பினரை அவர் இணைத்திருக்கிறார். மைசூர்த் தமிழ்ச் சங்கத்தின் நண்பர்களும் நிர்வாகிகளும் சங்கப் பணிகளின் நிமித்தமாகப் பேசும்போது புகழேந்தியின் பெயரை உச்சரிக்காமல் பேசுவதேயில்லை.
எல்லோரும் புகழேந்தியைப் பற்றிப் பேசுவார்கள் என்பது ஒரு பக்கம் என்றால் புகழேந்தியும் எல்லோரைப் பற்றியும் பெருமிதம் மேலிடப்பேசுவார். பண்புகளில் அரியது இந்தப் பண்பு. சமூகத்தின் உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் வெவ்வேறு சக்திகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறுவதில் புகழேந்திக்கு நிகர் புகழேந்திதான். இப்போது அவர் ஒன்றிணைத்திருப்பது பல்வேறு நபர்களின் பத்திரங்களில் பயன்பாடற்றுக் கிடந்த கரடுமுரடான நிலப்பரப்பை இப்போது அங்கே பல்வேறு பயிர்கள் வெவ்வேறு பரப்பில் ஒன்றிணைந்தே வளர்க்கின்றன.
நான் தனிமனிதனல்ல, என்னைச் சுற்றியுள்ள இனிய நண்பர்களே என்னை இவ்வழியில் இயக்குகிறார்கள். அவர்களின்றி நானில்லை. இவர்களைக் குறித்தெல்லாம் எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருபதுக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளில் ஆளுமைத்தன்மை கொண்ட தமிழ் நண்பர்களைத் தமது இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து நம்முன் அடுக்குகிறார் அவர். அவரைக்குறித்து எழுதுவது என்பதே அவரது நண்பர்களைக் குறித்து எழுதுவதுதான் என்று விளக்குகிறோம் நாம்.
அந்த பனிசூழ்ந்த அமைதிப் பண்ணையில் அவருடனான நமது உரையாடலுக்குப்பிறகு இனியதோர் அமைதி நிலவுகிறது அந்த நள்ளிரவில். நாடெங்கும் குறிப்பாக தமிழ்நாட்டில் குறைந்தது இதுபோன்று கூட்டுறவுப் பண்ணைகள் அமைய வேண்டும் என்பது புகழேந்தியின் கனவு. நாளை அது நிச்சயமாக நிறைவேறும் புகழேந்தி. உங்களுக்கு எமது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்...
திரு.கு.புகழேந்தியின் ஹிமாவத் ஃபார்ம் (பனிசூழ்ந்த பண்ணை)க்கு 26.6.2008 அன்று இதழாஜீரயர் மு.நாகேசுவரன் தமது துணைவியாருடனும், தருமபுரி விவேகானந்தா நர்சிங் கல்லூரித் தாளாளர் சகோதரி வசந்த ராணியுடனும், செல்வி சரண்யாவுடனும் வருகை புரிந்தார். புகழேந்தி தொடர்ந்து இன்னும் நிறையப் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. மைசூர்த் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தென் கர்நாடக மாவட்டங்களின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான திரு கு.புகழேந்தி கருநாடக மக்களுடன் நல்லுறவே தங்களது குறிக்கோள் எனவும், தமிழர்களை ஒருங்கிணைத்து அவர்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது தம் செயல்பாடு என்றும் கூறுகிறார். மைசூர் முரசின் ஆசிரியராகவும் திகழ்கிறார்.
அவரது முகவரி: Sri K. Pugazhendi, 178, Fifth Cross 11th Main, Saraswathipuram, Mysore 570 09, Cell : 94480 54831
- தமிழ்ச் சங்கச் செய்திமடல்








