• slider1
  • slider2
சொந்த நிலத்தில் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் அனைவருக்கும் பொதுவான ஒரு வசந்த இல்லம்...

பண மழை பொழியும் பண்ணை

பணத்தோட்டம் தொழில்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, 'செஸ் (SEZ) எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ-Special Economic Zones) அமைப்பது போல, வேளாண்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து சாஸ் (SAZ) எனும் சிறப்பு வேளாண் மண்டலங்களை (Special Agricultural Zone) அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தொடர்.


சிறப்பு வேளாண் மண்டலம் என்கிற கனவுத் திட்டத்தை உரித்து வைத்தது போல, மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் 60 கி.மீ தூரத்தில் குண்டல்பேட் அருகே உருவாகியிருக்கும் கூட்டுப்பண்ணையை கடந்த இதழில் பார்த்தோம். கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் மற்றும் கன்னடர்கள் என 14 பேர்களால் 'ஹிம்மவத் பண்ணை' என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்தப் பண்ணையை நேரில் பார்வையிட்டு வந்திருக்கும் 'பசுமை விகடன்' உதவி ஆசிரியர் ஆத்தூர் செந்தில்குமார் தொடர்ந்து வர்ணிக்கிறார்.


மறுநாள், அதிகாலை 5.30 மணி... கீழ்வானம் ஆரஞ்சு வண்ண உடையுடுத்தி சூரியனின் வரவுக்காகக் காத்திருந்த வேளை... மாசு, மரு இல்லாத குளிர்காற்று உடலை உரசிச்செல்ல, உள்ளமெங்கும் புத்துணர்ச்சி. இத்தகையதொரு அழகிய சூழ்நிலையில் கூட்டுப்பண்ணையில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைப் பற்றி பட்டியல் இட்டபடியே நடந்தார் பண்ணையை நிர்வகித்து வருபவரும் மைசூர் தமிழ்ச்சங்கத்தின செயலாளருமான (கடந்த இதழில் தலைவர் என்று தவறுதலாக இடம் பெற்றுவிட்டது) புகழேந்தி.


"இந்த இடத்தை நாங்கள் தேர்வு செய்ததற்கு முக்கியக் காரணம் செம்மண்தான். இம்மண்ணில் எல்லா பயிரும் தங்குதடையின்றி வளரும் என்பது விவசாய நிபுணர்களின் கருத்து. ஒவ்வொரு பயிரையும் நன்கு ஆலோசித்து, பிறகு அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடம் விசாரித்த பிறகே பயிரிட்டுள்ளோம். கூட்டுப்பண்ணைக்கு விவசாயத் தொழில்நுட்பங்களை வழங்குபவர் சாதாரண ஆள் அல்ல. இந்தப் பகுதியில் 'டொமாட்டோ கிங்’ என்று விவசாயிகளால் அழைக்கப்படும் தக்காளி விவசாயியான வீ. பாலகிருஷ்ணன். ஒவ்வொரு சீசனிலும் தக்காளி சாகுபடியில் மட்டும் லட்சக் கணக்கில் லாபம் பார்த்து வருபவர். கூட்டுப் பண்ணையின் பங்குதாரரும் கூட.


14 பங்குதாரர்களும், லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதைத் தவிர, 72 லட்ச ரூபாய் வங்கியில் கடன் வாங்கியுள்ளோம். வங்கிக்கடனை வைத்து சாகுபடி செலவுகள் மற்றும் இதர செலவுகளை கவனித்து வரும்படி திட்டம் தீட்டியுள்ளோம். முதலாம் ஆண்டே ரூ.60 ஆயிரம் வீதம் லாபமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது முதலீட்டைப் பொறுத்து ஒவ்வொரு பங்குதாரருக்கும் மாறுபடும். எதிர்காலத்தில் லட்சக்கணக்கில் லாபம் கூடும்" என்று சொன்னவர், வாழை மரங்களுக்கு இடையே வளர்ந்த மாஞ்செடிகளிடம் போய் நின்றார்.


"இது நம்ம ஊர் மாஞ்செடிபோல் பழத்துக்கானது அல்ல... காயாக மட்டுமே பயன்படுத்தக்கூடியது. அதுவும் வடுமாங்காயாக! தமிழ்நாட்டு சினிமாவில் படாதபாடுபடும் 'வடுமாங்காய்', கர்நாடகத்தில் பெரிய அளவு வருவாய் தரும் காயாக இருக்கிறது. ஊறுகாய்க்கு முக்கியமாகப் பயன்படுத்துகிறார்கள். மங்களூரில் இது ரொம்ப பிரபலமானது. ஒருவரின் வீட்டு விசேஷத்தில் வடுமாங்காய் பரிமாறப்பட்டால், அவர் மிகவும் வசதியானவர் என்று அர்த்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது வடுமாங்காய். ஓட்டல்களில் சாதாரணச் சாப்பாடு 15 ரூபாய் என்றால் வடுமாங்காய் ஊறுகாயோடு சேர்ந்த சாப்பாடு ரூ.20. கர்நாடகாவில் பரவலாக வடுமாங்காய் பயன்படுத்தி வருகிறார்கள்.


பத்து ஆண்டுகள் வயதுடைய ஒரு மரத்தில் வரிசையாக அணிவகுத்து நின்ற மரங்களைக் கைகாட்டியவர், "அதிவேகமாக வளரக்கூடிய மர வகைகளில் மலை வேம்பும் ஒன்று. நடவுசெய்த ஆறாம் ஆண்டே இதை வெட்டி காசு பார்க்கலாம். சிறந்த மரச்சாமான்கள் செய்ய இது உதவும். இந்த மலைவேம்பு 10 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் ஆறாம் ஆண்டு சராசரியாக 6 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். இது இன்றைய மர மார்க்கெட் விலைப்படியான கணக்கு. இன்னும் ஆறு ஆண்டுகள் கழித்து நிச்சயமாக இது சில மடங்கு கூடியே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


மாதம்தோறும் வருமானம் தரும் வகையில் 5 ஏக்கர் நிலத்தில் கறிவேப்பிலை பயிரிட்டுள்ளோம். 40 ஏக்கரில் G9 என்ற வாழை குலைதள்ளி விற்பனைக்குத் தயாராகிவிட்டது.


வங்கிக்கடனை அடைப்பதற்கென்றே ஒரு பயிரைத் தேர்வு செய்துள்ளோம். அதுதான் கரும்பு. சுமார் 15 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளோம். இங்கே, பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். ஆண்டுக்கு 1,000 டன் வரை மகசூல் எதிர்பார்க்கிறோம். அதற்கு தகுந்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். எனவே, ஒரு டன் ஆயிரம் ரூபாய் என்றால் 10 லட்ச ரூபாய் ஆண்டுக்குக் கிடைக்கும். இதை வைத்து வங்கிக் கடனை 10 ஆண்டுகள் அடைத்துவிடுவோம்" என்றார் சந்தோஷம் பொங்க.


பண்ணை முழுக்க சொட்டுநீர் பாசனம் போடப்பட்டிருக்கிறது. சுவிட்சைத் தட்டிவிட்டால் தண்ணீர் கொட்டுகிறது. இது வனப்பகுதி என்பதால் யானை, கரடி மற்றும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகம். அவை பண்ணைக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடும் என்பதால், பண்ணையைச் சுற்றி சூரியசக்தி மூலம் இயங்கும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. பண்ணையில் பணிபுரியும் வேலையாட்கள், ஓட்டுநர்கள், இயந்திர இயக்குநர்கள் என்று பலரும் தங்குவதற்கு கட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. தற்சமயத்துக்கு தற்காலிக கூடாரத்தில் தங்கியுள்ளனர்.


இதைப்பற்றியெல்லாம் பேசிய புகழேந்தி, "பண்ணை வளர வேண்டும் என்றால் மனிதவளம் அவசியம் பண்ணையில் பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சிதான் எங்கள் முதல் நோக்கம். இங்கேயே தங்கி இருப்பவர்கள் தவிர, பக்கத்து கிராமத்தில் இருந்தும் தினந்தோறும் வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள். டிராக்டரில் அவர்களை அழைத்து வருவோம். மாலையில் அதே டிராக்டரில் கொண்டுபோய் விட்டு விடுவோம். அன்றைய தினம் வேலை செய்ததற்கான கூலியை அன்று மாலையை கொடுத்துவிடுகிறோம். இதனால், 'நான் நீ' என்று போட்டிப்போட்டுக் கொண்டு பண்ணை வேலைக்கு ஆட்கள் வருகிறார்கள்" என்று புகழேந்தி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு டிராக்டர் நிறைய ஆட்கள் வந்து இறங்கினார்கள். அவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்து கொடுக்கும் பணியில் மூழ்கினார் புகழேந்தி.


பங்குதா
ரர்களில் ஒருவரான ரவிக்குமார், பண்ணையை நிர்வகிப்பவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இடைவெளியில் அவரிடம் பேசியபோது, "இங்க வேலைக்கு வர்றவங்க, ஆரம்பத்துல ரொம்ப ஏழ்மையான நிலையில் இருந்தாங்க. கிழிஞ்சி போன துணியை உடுத்திக் கிட்டுதான் வருவாங்க. உழைப்பைக் கொடுக்கத் தயாரா இருந்தாலும் அவங்களுக்கு இவ்வளவு நாளா சரியான வேலை கிடைக்கல. கூட்டுப்பண்ணை உருவான பிறகு, அந்த மக்கள் வசிக்கற கிராமமே மாறிப் போயிடுச்சி. எல்லாருக்கும் வேலை கிடைக்குது. நல்ல துணிகளை உடுத்துறாங்க. நல்ல சோறு சாப்பிடறாங்க" என்றார்.


மீண்டும் நம்மிடம் வந்த புகழேந்தி, "இந்த கூட்டுப்பண்ணையோட நோக்கம், விவசாயம் என்பது மற்ற தொழிலைப் போல பணமழை பொழியும் ஒரு தொழில் என்ற நிலையை உருவாக்குவதுதான். சரியான திட்டமிடலும், வழிக்காட்டலும் இருந்தால் சாதிக்கலாம்" என்று உறுதியான குரலில் சொல்லி விடைகொ டுத்தார்.


கூட்டுப்பண்ணையின் முதலாம் ஆண்டு லாபத்தை சீக்கிரமே 14 பேரும் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள். அதற்கான நாள்... ஆகஸ்ட் 31!


100 ஏக்கர் கூட்டுப்பண்ணையின் தொடக்கம், ஒரு புயி பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுள்ளது. 100 ஏக்கரில் இவர்கள் செய்திருக்கும் சாதனையே நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது என்றால்... 1,000 ஏக்கர், 2,000 ஏக்கர் நிலத்தில் கூட்டுப்பண்ணையை (எஸ்.ஏ.இசட்) மனதில் வரைந்து பாருங்கள்.


- விவாதிப்போம்

படங்கள்: இரா.ரவிவர்மன்

 

முதல்பக்கம்
நோக்கம்
நிறுவனர்
கூட்டுப்பண்ணைகள்
தொடர்பு
ஊடகம்
காணொலி
செய்திகள்
புகைப்படங்கள்
கடிதங்கள்
FOLLOW ON US